பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு! .

2025

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொண்டு வந்திருந்தனர்.இன்று  (03.10.2019)  பிரான்சின் 94 மாவட்டத்திலே மாவட்ட அலுவலகம் மற்றும் வர்த்தக மையம் போன்றவற்றால் ஏற்பாடு செய்த உதைபந்தாட்டப் போட்டி>  Police de Préfecture  மாவட்ட காவல்துறைக்கும் CRS என்று அழைக்கப்படும் Compagnies Républicaines de Sécurité மற்றும் மாநகரசபை காவல்துறை, சிவில் பொலிசார், புலனாய்வுத்துறை காவல்துறை போன்றவற்றிக்கும் பிரான்சு நாட்டின் கடல்கடந்த தீவாக விளங்கும் சென் சென்டனி மாவட்ட அணிக்கும் தமிழீழ அணிக்குமாக மொத்தம் 16 அணிகளுக்கிடையேயான உதைபந்தாட்டப்போட்டி இன்று காலை 10.00 மணிக்கு சுவாசிலே றூவா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நடைபெற்ற ஒவ்வொரு போட்டியின் போதும் தமிழீழ அணியின் வீரர்கள் நின்று நிதானமாக விளையாடி வெற்றிகளைப் பெற்றுக்கொண்டு வந்தனர். ஒரேயொரு போட்டியில் வெற்றி உதையில் எதிர் அணி வெற்றியை பெற்றுக்கொண்டிருந்தது. இறுதிப்போட்டிவரை வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு பிரான்சு தமிழீழ அணி தெரிவானது. Préfecture Police அணியோடு போட்டி இடம்பெற்றது. 15 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து  பிரான்சு தமிழீழ அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. சம்மேளனத்தினது ஆதரவும் பயிற்சியாளர்களின் நெறிப்படுத்தலும் தமிழர் விளையாட்டுத்துறையின் உற்சாகப்படுத்தலும் இன்றைய போட்டியில் 20 இற்கு மேற்பட்ட கோல்களை எம்மவர்கள் அடித்திருந்தனர் என்பதேடு அதில் எமது இளம்வீரர் மட்டும் 9 கோல்களைப் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய போட்டிகளை ஏற்பாடு செய்தவர்கள் குறித்த நேரத்தில் போட்டிகளை ஆரம்பித்து குறித்த நேரத்தில் போட்டிகளை நிறைவு செய்திருந்தனர். போட்டியில் பங்கு பற்றிய கழகங்களும் வெளியில் இருந்து வந்த கழகங்களும் பாராட்டப்பட்டன. பரிசில்களும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வில் மாவட்ட உயர் காவல்துறை அதிகாரிகள், அரசஉத்தியோகத்தர்கள் பங்கு கொண்டு சிறப்பித்து உரையும் ஆற்றினர். இன்று பாரிசில் நடைபெற்ற தாக்குதலில் உயிர் இழந்த காவல்துறை பெண் பொலிசாருக்கும் மற்றும் ஏனையோருக்கும் ஒரு நிமிடம் அமைதிவணக்கம் செய்யப்பட்டது. இறுதிப்போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட தமிழீழ அணியினருக்கு வெற்றிக்கிண்ணமும்  உதைபந்தாட்ட உடையும் வழங்கப்பட்டது. மீண்டும் மீண்டும் போட்டிகளில் பங்குகொள்ள வேண்டும் என தமிழீழ அணியிடம் நடத்துநர்கள் கேட்டிருந்தனர். பிரான்சு  தமிழீழ அணியோடு விளையாடிய ஏனைய வீரர்கள் ஒட்டுமொத்தமாக தமது அன்பையும் வாழ்த்துதல்களையும் சகோதரத்துவத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.பிரான்சு மண்ணில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் செயற்பாட்டிலும் இவ்நிகழ்வானது ஒருமைல் கல்லாகவே அமைகின்றது. கடந்த 26 வருடங்களின் பின்பு இப்படியொரு சந்தர்ப்பம் தமிழர் விளையாட்டுத் துறைக்கு கிடைத்துள்ளமையும் அதனை சரியான வழியில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளத்தினைக் கொண்டு பங்குகொள்ள வைத்து வெற்றியைப் பெற்றிருப்பது அனைத்துத் தமிழர்களுக்கும் வீரர்களுக்கும் மிகுந்த சந்தோசத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தேசங்களில் வளர்ந்து வரும் எமது அடுத்த தலைமுறையினர் ஒவ்வொரு துறைசார் வழிகளிலும் வளர்த்தெடுப்பதோடு நின்றுவிடாது அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து பங்குகொள்ள வைக்க வேண்டும். இதன் மூலமாயும் எமது தமிழ் இனத்தின் பெருமையையும் புகழையும் தேடிக்கொடுப்பதோடு மாத்திரம் நின்றுவிடாது. இந்த இனம் ஏன் இங்கு வந்தார்கள்; வாழ்கின்றார்கள்; இவர்களின் வலியும் தேவையும் என்ன? என்பதையும் அதற்காக நியாயமான தீர்வை எட்டுவதற்கு ஒரு புரிதலுடன் உதவிட இதுபோன்ற செயற்பாடுகளும் ஆரோக்கியமுள்ளதாக அமைத்துக் கொடுக்கும் என்பதையே இன்றைய போட்டி நிகழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு )