சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலேயே தமிழர்களுக்கு தீர்வு;சிவாஜி நேர்காணல்

412

லங்கையில் தமிழனமானது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆகக்குறைந்தது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை போர் குற்றங்கள் என்பவற்றுக்கு நீதி கிடைப்பது மற்றும் உறுதிப்படுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைப்பது மற்றும் இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியலில் ஒரு குறிக்கப்பட்ட காலத்துக்குள் தவறவிடப்படமிடத்து ஐ.நா. சபையின் அனுசரணையில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை தெரிவித்து கொள்வதற்காக வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி ஒரு அரசியல் தீர்வைக்காண வேண்டுமென்ற கோரிக்கையையும் ஈழத்தமிழர் சார்பில் வலியுறுத்துவது பற்றியும் மக்களிடம் ஆணையை கோரவுள்ளோம் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கேள்வி; எதிர்வரும் பொதுத் தேர்தலில் டெலோலிலிருந்து பிரிந்து தமிழ் தேசிய கட்சியை உருவாக்கி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் கூட்டணியில் போட்டியிடுவதற்கான காரணம் என்ன?

பதில்; எமது கூட்டணிக்கான பெயர் தமிழர் ஒற்றுமை கூட்டணி, ஆனால் எங்கள் கூட்டணியிலுள்ள நான்கு கட்சிகளில் ஈ.பி.ஆர். எல். எல் கட்சிக்கு மட்டும் தேர்தல் ஆணையத்தில்
அங்கீகாரம் உண்டு.

எனவே அதன் பெயரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியென மாற்றி அந்த கட்சியின் பேரிலும் சின்னத்திலும் எமது கூட்டணி போட்டியிடவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய போதிலும் ஆகக்குறைந்தது இடைக்கால தீர்வைக் கூட பெறமுடியவில்லை. போல் அது ஐ.தே.க வின் தமிழ் பிரிவு போல செயற்பட்டது. இதன் காரணத்தால் அதிலிருந்து வெளியேறி புதிய கட்சி அமைத்து ஒரு கூட்டணியாக தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
நான் முன்னர் அங்கம் வகித்த ரெலோவின் ஆயுதப் போராட்டம் முதல் அரசியல் செயற்பாட்டு கட்சியாக இருந்து வரும் 47 ஆண்டுகளில் (1973 முதல் 2019)வரையான 46 ஆண்டுகள் கட்சியில் இருந்து விட்டு மனவேதனையுடன் தான் வெளியேறினேன்.

கேள்வி; அண்மையில் உங்கள் இந்திய விஜயம் குறித்து?

பதில் ; மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்தேன். ஒரு மாத காலம் சிகிச்சை பெறவேண்டிய சூழ்நிலை இருந்தபோதும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டியிருந்தால் இரு வாரங்களில்
நாடு திரும்பினேன். மீண்டும் சிகிச்சைக்கு சென்றேன். அங்கு தங்கியிருந்த ஒரு மாத காலத்தில், சிகிச்சையின் போது கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்தி அங்குள்ள அரசியல்வாதிகளை சந்தித்துப் பேசினேன்.

தமிழகம் சென்ற இரண்டாவது நாளே புரட்சித் தலைவர் எம். ஜி. ஆரின் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் , பேரறிஞர் அண்ணாவின் , கலைஞர் ஆகியோரின் சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். இதையடுத்து ஊடகங்களுக்கு ஈழத்தமிழர் விடயம் குறித்து எடுத்து விளக்கினேன்.

மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரும் முன்னைநாள் சட்ட அமைச்சர் (எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியில் அமைச்சராகவிருந்தவர். பொன்னையனை நானும் கவிஞர் காசி ஆனந்தனும் சந்தித்து தமிழக சட்ட மன்றத்திலே ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான தீர்மானங்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த தீர்மானங்களைப் போல ஒரு சில தீர்மானங்களை கொண்டு வருவது பற்றி வலியுறுத்தினோம்.

அதை ஏற்ற பொன்னையன் தமிழக முதலமைச்சருடன் பேசி இந்த தீர்மானங்களை நிறைவேற்ற ஆவன செய்யப்படுமென உறுதியளித்தார்.

இதையடுத்து பா.ஜ.கவின் தமிழக தலைவரில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இல. கணேசனையும் சந்தித்து இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பில் எனது கருத்துகளை எடுத்துக் கூறினேன். அந்த கருத்துகளை பிரதமர் உட்பட பா.ஜ.க. தலைவர்களிடம் வலியுறுத்துவதாக இல. கணேசன் என்னிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் பழ. நெடுமாறனை சந்தித்து மிக விரிவான பேச்சினை நடத்தினேன். அப்போது பழ. நெடுமாறனுடன் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவல் கணேசனும் உடனிருந்தார்.

ம.தி.மு.க.வினுடைய பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைகோவை சென்னையிலுள்ள அவரது தலைமை அலுவலகமான தாயகத்தில் வைத்து எமது தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந. சிறிகாந்தாவுடன் நானும் சந்தித்து சுமார் இருமணிநேரங்கள் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்ற விடயத்தை பற்றி கலந்துரையாடி சில செயற்றிட்டங்களை வகுத்தோம்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களான தா. பாண்டியனையும் நல்ல கண்ணுவையும் அதுபோல் சி. மகேந்திரனையும் வெவ்வேறாக சந்தித்து நான் கலந்துரையாடினேன்.

போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஈழத்தமிழர்கள் சார்பில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனையும் சந்தித்து விரிவான பேச்சினை நடத்தினேன். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் சந்தித்தேன்

இதைவிட தமிழ் உணர்வாளர்களான இயக்குநர்களான புகழேந்தி மற்றும் கௌதமன் , ஓவியர் புகழேந்தி மற்றும் பல கட்சிகளையும் அமைப்புகளையும் சந்தித்துப் பேசினேன்.

இந்த சந்திப்புகளில் ஐ.நா மனித உரிமை பேரவை ஒரு வேண்டுகோளை தமிழக மக்கள் சார்பில் தமிழகத்தில் செயற்படும் தேசிய மற்றும் மாநில கட்சிகளிடமிருந்து கையொப்பங்களை பெற்று மகஜரொன்றை அனுப்புவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. இந்த மகஜரில் தேசிய மற்றும் மாநில கட்சிகளிடமிருந்து கையெழுத்துபெறும் பணியை பழ நெடுமாறனிடம் நான் ஒப்படைத்தேன்.

மேலும் இந்தியாவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர்களுக்கு நிதி கிடைப்பதற்கான ஒரு மகாநாட்டை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்ட நிலையில் செயற்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேள்வி ; எதிர்வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி என்ன விடயங்களை முன்வைத்து
போட்டியிட போகின்றது?

பதில்; இலங்கையில் தமிழனத்திமானது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆகக்குறைந்தது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை போர் குற்றங்கள் என்பவற்றுக்கு நீதி கிடைப்பது மற்றும் உறுதிப்படுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைப்பது மற்றும் இலங்கைக்குள் ஒரு நிரந்தரமான அரசியலில் ஒரு குறிக்கப்பட்ட காலத்துக்குள் தவறவிடப்படமிடத்து ஐ.நா. சபையின் அனுசரணையில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளை தெரிவித்து கொள்வதற்காக வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி ஒரு அரசியல் தீர்வைக்காண வேண்டுமென்ற கோரிக்கையையும் ஈழத்தமிழர் சார்பில் வலியுறுத்துவது பற்றியும் மக்களிடம் ஆணையை கோருவோம்.

கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களது விடயம் அரசியல் கைதிகளுடைய விடுதலை, தமிழர் தாயகத்தில் தனியார் காணிகளிலிருந்து படையினர் வெளியேற்றம், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமானம் மறுவாழ்வு குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம் மீள்குடியேற்றம் ஆகியவற்றை துரிதமாக மேற்கொள்வதுஎன்பவற்றையும் குறிப்பிடுவோம்.

மேலும் மக்களுடைய சமூக பொருளாதார அபிவிருத்தி, குறிப்பாக இளையோருக்கான வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை மேற்கொள்வதற்கான யோசனைகளும் தேர்தல் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும்.

கேள்வி; தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

பதில்; கடந்த தமிழ் மக்களுடைய மிகப்பெரிய ஆதரவை பெற்றவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிட்டு இடைக்கால தீர்வைக் கூட பெறமுடியாது போனது. அவர்களுக்கு உரிய பாடங்களை புகட்டவும் இன விடுதலை நோக்கிய தமிழ் இனத்தின் பயணத்தில் உறுதியாக பயணிக்க கூடியவர்களை தேர்தலில் தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

நன்றி தினக்குரலுக்கு