2021-ல் ஒலிம்பிக் நடைபெறுமா?சந்தேகம் வெளியிட்டுள்ள தலைவர்

1069

விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி 2016-இல் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

அதன்பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பால், போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா். இதையடுத்து இந்த வருடம் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி வரும் 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரையும் பாராலிம்பிக் போட்டிகள் ஆக. 24 முதல் செப். 5 வரையும் நடைபெறும் என ஐஓசி, போட்டி அமைப்புக் குழு உள்ளிட்டவை அறிவித்துள்ளன.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் 2021-ல் கூட ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என போட்டி அமைப்புக் குழு தலைவர் தொஷிரோ முடோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

ஜூலை 2021-ல் கரோனா வைரஸ் தொற்று முற்றிலும் விலகிவிடும் என யாராலும் சொல்ல முடியாது. அதற்குள் போட்டியை நடத்துவதற்காக எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் கூறமுடியாது. இதுகுறித்து தெளிவான பதிலை கூற முடியாத நிலையில் உள்ளோம். ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடம் தள்ளி வைத்துள்ளோம். எனவே அனைவரும் போட்டியை நடத்த கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த வருடம் மனித சமூகம் கரோனாவை வீழ்த்தி விடும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.