இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்

396

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கேரளா முன்மொழிந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்த தொற்றினை அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும். அவர்களது ரத்தத்தில் இருந்து எதிரணுக்களை பிரித் தெடுத்து,நோயாளிகளின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிளாஸ்மா என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை முறை நல்ல பலன் அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சிகிச்சை குறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நேற்று முன்தினம் கூறியதாவது:

கரோனா வைரஸ் விவகாரத்தில் பிளாஸ்மா சிகிச்சை உட்பட எந்தவொரு சிகிச்சைக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கவில்லை.

பிளாஸ்மா சிகிச்சை இப்போது ஆராய்ச்சி, சோதனை நிலையில் மட்டுமே உள்ளது. சரியான முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். கரோனா வைரஸ் காய்ச்சலை பிளாஸ்மா சிகிச்சை முறை குணப்படுத்தும் என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. இந்த சிகிச்சை தொடர்பாக தேசிய அளவில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.