முக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

1072

நிமால் விநாயகமூர்த்தி

தமிழர் வரலாற்றில் முக்கிய கூட்டு நினைவாக அமையும், மே 18 துயர் தினத்தை நினைவு கூர்வதும், அஞ்சலி செலுத்துவதும் ஈழத்தமிழர்களின் கட்டாயக் கடமையாகும். முள்ளிவாய்க்கால் என்பது தமிழின அழிப்பின் வரலாற்று சாட்சியமாகும். மே 18 திங்களன்று, முள்ளிவாய்க்கால் அழிவின் பதினோராவது ஆண்டு நினைவு நாள் – பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் தமிழர் தேசம் இழந்துபோன துயர்தோய்ந்த நாள். ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிங்களம் புரிந்த அனியாயத்தின் இரத்த சாட்சியம்தான் முள்ளிவாய்க்கால். ஈழத்தமிழ் மக்கள்மீது சிங்களம் மேற்கொண்டது போல, உலகில் வாழும் எந்த இன மக்கள் மீதும் இவ்வாறானதொரு அழிவு, நவீன வரலாற்றில் இடம்பெறவில்லை. நமது மக்கள் வாழ்வே போராகவும், போரே வாழ்வாகவும் வாழ்ந்தவர்கள். எந்த ஒரு நெருக்கடியிலும் தங்களது விடுதலை வேட்கையை துறக்காது, தாயக மண் மீட்பில் பயணித்தவர்கள். இனஅழிப்பின் பின்னரும் எமது இறைமையை மீட்பதற்கு உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளான மே 18 திங்கள் கிழமையைத் தேசிய துக்க நாளாக அனுஷ்டிப்பது, தேசியத்திற்கான உயிர்ப்புணர்வை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைகிறது. முள்ளிவாய்க்கால் அவலத்தை தலைமுறை தலைமுறையாக நினைவு கொள்வதும், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதும் எமது கடமையாகும். இந்த நிகழ்வை ஆண்டாண்டுகளுக்கு காவிச்செல்ல வல்ல நினைவு ஆலயங்களை அமைத்தும், அருங்காட்சியகங்களை உருவாக்கியும், நினைவுச் சின்னங்களைக் காலா காலமாகப் பாதுகாக்க வேண்டியது, இன்றைய காலத்தின் தேவையாகும். இந்தச் செயல்திட்டம் கடந்த பதினொரு வருடங்களாகச் சரிவரச் செயல்படுத்தப்படாமையானது, ஒரு கவலை தரும் விடயமாகும். அதே சமயம் தமிழ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ ஒரு நினைவாலயமாக அமைந்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த முற்றத்தை உருவாக்கி பராமரிப்பவர்களுக்குப் பாராட்டுச் செலுத்தாமல் இருக்க முடியாது.

இதேமாதிரியான ஆலயங்களும் அருங்காட்சியகங்களும் தமிழர் நிலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் விரைவில் உருவாக்கப்படவேண்டும். முள்ளிவாய்க்காலின் பின்னர், நாம் புதிய வழிகளில், புதிய வாய்ப்புகளின் அடிப்படையில் எமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதே, தமிழ் மக்களின் முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவாகும். அனைத்துலக அரசுகள் தற்போதைய சூழலில் நமது மக்களின் உச்சபட்ச அரசியல் அவாவை, தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்காவிடினும், சிங்களத்தின் சமரசம் காணமுடியாத அமைப்புசார் சிக்கல்களும், உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களும் அந்நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புவோமாக! விடுதலை வேண்டிப் போராடும் மக்களும் தேசங்களும் ஒடுக்குமுறையாளர்களால் வலிகளையும் துயரங்களையும் தாங்கிப் பயணித்த வரலாறுகள் உலகிற்கு புதிதல்ல. அவை நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன. வலிகளும் வடுக்களும் வேதனைகளும் விடுதலை வேட்கையை முனைப்புறச் செய்வனவே ஒழிய, மழுங்கடிப்பவை அல்ல. முள்ளிவாய்க்கால் பெருந்துயரின்போது, தமிழரின் தொப்புள் கொடி உறவாகிய எட்டுக் கோடிக்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு வலையினையும், பத்து இலட்சத்திக்கும் மேற்பட்ட புலம்பெயர் உறவுகளின் கண்காணிப்பினையும் மீறித்தான், முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்திருக்கிறது. இரண்டு கோடி மக்கள் கொண்ட சிங்களத்தால் எட்டுக் கோடி தமிழ் மக்களின் பலத்தையும், உலகெங்கும் சிதறி வாழும் புலம்பெயர் மக்களின் ஆதரவையும் மீறி, முள்ளிவாய்க்கால் அவலத்தை நிகழ்த்த முடித்திருக்கின்றது – இது நமக்கு ஒரு தெளிவான செய்தியாகும்.

இன்றைய உலகில் மக்கள் நலனை விட, அரசுகளின் வெளியுறவுக் கொள்கையே தீர்க்கமான சக்தியாக இயங்கி வரும் நிலையில், அரசுகளின் நலன்களுக்கு முன்னால், மனித உயிர்கள் பெறுமதியற்றுப் போகின்றன என்பதே கண்கூடு. தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தன்னைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் முனைப்பில் இருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது. தமிழர் தேசம் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், தொடர்ச்சியான இராணுவ பிரசன்னத்தினாலும், மேம்பாடு என்ற போர்வையிலும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் ஏனைய முயற்சிகளாலும், தமிழ் மக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மக்களும் ஒடுக்குமுறையின் கோரப் பற்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மக்கள் என்னும் அடிப்படையில் ஒற்றையாட்சிக்குள் வாழுமாறு நமது மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அரசியல் உடன்பாடு காண்பதற்கான முப்பது வருடகால முயற்சிகள் அனைத்தும் பேரினவாத நடவடிக்கைகளால் தோல்வியுற்றன. இந்தப் பின்புலத்தில்தான், தமிழர் இருப்புக்கு தனியாகச் செல்வதுதான் ஒரேயொரு மார்க்கம் என்று தந்தை செல்வா கூற நேர்ந்தது. தந்தை செல்வா காட்டிய திசையில் தமிழின இருப்பைப் பாதுகாப்பதற்காக தமிழ் இளைஞர்கள் தம்வாழ்வை அர்ப்பணித்து விடுதலை இயக்கங்களாக எழுச்சியுற்றனர்.

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ்நாட்டு உறவுகளின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழகத் தொப்புள் கொடி உறவுகளின் மத்தியில் எமது மக்களின் உரிமைகள் ஆழமான கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இவ்வகையில், தமிழர் தேசம் என்னும் ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகளாக தமிழக உறவுகளும் உலகத் தமிழ் மக்களும் உள்ளனர். இன்றைய சர்வதேச அரசியல் மாற்றங்கள் – இலங்கைத் தீவின் புவிசார் அரசியல் மாற்றங்கள் என்பன தமிழர் தேசதிற்கான வாய்ப்புக்களின் கதவுகளைத் தற்போது திறந்தே வைத்துள்ளன.

இவற்றையெல்லாம் தமிழர் தேசம் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். தனித்துச் செல்வதே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஈழத் தமிழர்கள் செயற்படவேண்டும். முள்ளிவாய்க்காலில் பேரவலம் நடந்து பதினோரு ஆண்டுகள் நிறைவைடைந்துவிட்டன. இருந்தும் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை. போரால் விதவைகளாக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்த முடியவில்லை. முன்னாள் போராளிகளின் மறுவாழ்வைச் சீரமைக்க முடியவில்லை. மேலும் பதினோரு ஆண்டு நிறைவடைந்தும், தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படாமல், அநீதிழைத்தவர்களே, மீண்டும் ஆட்சியைக் கைப்பறியுள்ளமை இலங்கைத்தீவில் நீதி அழிந்துவிட்டது என்பதையே அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. எனவே எமது மக்களுக்கான தீர்வு என்பது, எம்மை நாமே தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை பெறுவது ஒன்றேயாகும். தர்மத்தின் அஸ்திபாரத்தில் நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என்ற மன உறுதியுடன் தொடர்ந்து பயணிப்போம். உலகளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் ஒன்று கூடிப் பொதுநிகழ்வுகளை முன்னெடுக்க முடியாதவாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றோம். இந்த இக்கட்டான காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பதினோராம் ஆண்டு நினைவு நாளை மே18 திங்களன்று எமது வீடுகளில் குடும்பமாகச் சுடரேற்றி நினைவேந்திக் கொள்வோம்.

அத்துடன், அந்நாளில் வேலைத்தளங்களுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் என வெளியில் செல்வோர், கறுப்புப் பட்டி அணிந்து, எமது மக்களின் துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம். நமது அடுத்த சந்ததியினருக்கு இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் நடக்க விடமாட்டோம் என்ற திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூர்வோம். கொரோனா வைரஸின் தாக்கத்தால், வழமைபோல் முள்ளிவாய்க்கால் மண்ணில் கூடி, மக்கள் தங்கள் கண்ணீரை அம்மண்ணில் புதைக்க முடியாது போகலாம். ராஜபக்சேக்களின் மீள்வருகை, எதிர்காலத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஒன்று கூடுவதற்கு இடைஞ்சலாகவே இருக்கும். மக்களும் தேசங்களும் மகிழ்வின்போது ஒன்றிணையும் கணங்களைவிட, மனத் துயரின்போது ஒன்றிணையும் கணங்களே மிகவும் கனதியானவை – வலிமையானவை. எனவே முள்ளிவாய்க்கால் அவல நினைவு நாளில், வீழ்ந்தவர்களின் நினைவுகளுடன் எமது புனிதப் பயணத்திற்காக தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

நன்றி தினக்குரல்