கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க சிவப்பு எறும்பு சட்னி பயன்படுமா?- ஆய்வு செய்ய ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவு

120

ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், சிவப்பு எறும்புசட்னியை விரும்பி சாப்பிடுகின்றனர். சிவப்பு எறும்புகளுடன் பச்சை மிளகாயை வைத்து அரைத்து இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவில் பரிபடா நகரைச் சேர்ந்த இன்ஜீனியர் நயதர் பதியால் என்பவர் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘சிவப்பு எறும்பு சட்னி மருத்துவ குணம் கொண்டது. இந்த சட்னியில் புரோட்டீன், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதால் நோய் எதிர்ப்பு தன்மை உடையது. செரிமாணக் கோளாறுகளை நீக்குவதுடன் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. கொரோனா தொற்றுக்கு சிவப்பு எறும்பு சட்னியை மருந்தாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று நயதர் பதியால் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி கள், ‘‘ கொரோனா தொற்றை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னியை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்து ஆயுஷ் அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.