4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது; இன்று விடுதலை ஆகிறார் ச‌சிகலா: கரோனா சிகிச்சைக்கு பிறகு தமிழகம் திரும்புகிறார்

113

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்து சசிகலா இன்று விடுதலை செய்யப்படுகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு சரணடைந்தன‌ர். 4 ஆண்டு தண்டனை முடிந்து சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை அறிவித்தது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதிக்கு அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்தஒரு வாரமாக அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, ‘‘சசிகலாவுக்கு கரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளன. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு,ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாகஉள்ளது. அவருக்கு தேவையானஉணவை அவரே வாய் வழியாகஉண்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார். சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்”என தெரிவித்தார்.‌

இதுபற்றி பரப்பன அக்ரஹாராசிறைச்சாலையின் முதன்மை கண்காணிப்பாளர் சோமசேகர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறுகையில், ‘‘சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள‌தால் அவரை அங்கிருந்தவாறு விடுதலை செய்ய சிறைத்துறை முடிவெடுத்துள்ளது. புதன்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் சசிகலாவின் உடல் நிலை குறித்து விசாரித்து சான்றிதழ் பெறுவார்கள்.

பின்னர் சிறைத்துறையின் ஆவணங்களில் கையெழுத்து பெற்று, அவரது உடமைகளை வழக்கறிஞர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள்.

பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவு செய்துவிட்டார் என்பதற்கான சான்றிதழை சசிகலாவிடம் வழங்குவார்கள். சிறைத்துறையின் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பின்னர் சசிகலா பிற்பகலில் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்படுவார்.

சசிகலா விடுவிக்கப்பட்ட பின்னர்அவரது உறவினர்கள் விரும்பினால், மருத்துவர்களின் ஆலோசித்துவிட்டு அவரை தனியார்மருத்துவமனையில் அனுமதிக் கலாம்”என தெரிவித்தார்.

சசிகலா இன்று விடுதலை யாவதை தொடர்ந்து அவரதுஆதரவாளர்களும், அமமுக வினரும் பெங்களூருவில் குவிந்துவருகின்றன‌ர். அவரது உறவினர் கள் டி.டி.வி.தினகரன், விவேக், வெங்கடேஷ், சிவகுமார் உள்ளிட்டோரும் பெங்களூரு வந்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்காக‌ ஆஜரான வழக்கறிஞர்கள் செல்வகுமார், முத்துகுமார்உள்ளிட்டோரும் மருத்துவ மனையில் முகாமிட்டுள்ளனர்.

விக்டோரியா மருத்துவமனை யில் சசிகலாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவரை அங்கேயே மேலும் சிலநாட்கள் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாமா என அவரது உறவினர்கள் யோசித்து வருகின்றனர். சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டாலும் அவருக்கு கரோனா தொற்று இருப்பதால், சில நாட்கள் பெங்களூருவில் தங்கி ஓய்வெடுத்த பின்னரே தமிழகம் திரும்புவார். அப்போது வழிநெடுக அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக கூறப் படுகிறது.