தமிழில் அறுபடாத தொடர்ச்சி இருக்கின்றது

92

ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இலக்கியமாகட்டும், அன்றாட வாழ்வியலாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், துல்லியமாக பேச, எழுத, கேட்டு புரிந்துகொள்ள திறமை உடையவர்களாக இருத்தல் அவசியம்.

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூற வேண்டுமெனில்

இரண்டாயிரம் ஆண்டு மரபுடையது நம் மொழி, இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு. கிரேக்க மொழிக்கு இந்த சிறப்பு உண்டு, ஆனால் தொன்மையான கிரேக்க மொழியின் இலக்கியத்தை இன்றைக்கு அவர்களால் எளிதாக கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது.

நமக்கோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான திருக்குறளை பள்ளியில் கற்றுத் தருகின்றனர்.

திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம்,

சீன மொழியான மாண்டரின், அரபு மொழி என தொன்மையான மொழிகள் எதனை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய தொடர்ச்சி அறுந்து போயிருக்கின்றது. வடமொழியினை எடுத்துக் கொண்டால் அது வாழும் மொழியாக இல்லை. எபிரேய மொழியினை புதுப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அதன் தொன்மையை மீண்டும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

  • நடுவில் அது தன் மரபுத் தொடர்ச்சியினை இழந்து இருந்தது. ஆனால் தமிழில் அறுபடாத தொடர்ச்சி இருக்கின்றது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இடையில் குறைந்தது 500 – 600 ஆண்டுகள் நாம் அயலார் ஆதிக்கத்தில்தான் வாழ்ந்து இருக்கின்றோம். அப்படி இருந்த போதிலும், நம்முடைய மொழி எந்த விதமான அரசின் துணையும் இல்லாமல் மக்களால் மட்டுமே தொடர்ச்சியாக உயிர்ப்புத்தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ எதுவாயினும் ஒவ்வொரு தலைமுறையும் , அடுத்த தலைமுறைக்கு இந்த இலக்கியங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடு செயல்பட்டு இருக்கின்றனர்.