
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான நிலையில் ஈழத்தமிழினம் பெரும் எதிர்பார்ப்புடன் ஐநா நோக்கி கரங்களை நீட்டி காத்திருக்கிறது.ஈழத்துக்காக இதயங்களை திறக்குமாறு மனச்சாட்சியின் கதவுகளை தட்டுகின்றது.இந்த நிலையில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச் சங்க மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை போராளி கஜனின் ஒருங்கிணைப்பில் ஈழ உணர்வாளர்களின் ஒத்தாசையுடன் தாயகத்துக்காக நீதியும் உரிமையும் கோரும் பணியை இம்முறையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக ஓயாமல் கால நிலை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஐநாவை நோக்கி நீதி கேட்டு தமிழினப்படுகொலை சாட்சியங்களான நிழற்படங்களை காட்சிபடுத்தி செய்யப்பட்டுவரும் பரப்புரை பணி இம்முறை மிகவும் உயிராபத்தை விளைவிக்கும் உலக பேரிடரான கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திர நாளான பெப் 4ஐ கறுப்பு நாளாக ஈழத்தமிழினம் கடைப்பிடித்த நாளில் இருந்து பிரான்சின் முக்கிய ராஜதந்திர மையங்களான நகர மற்றும் மாநகர சபைகளின் முன் இனப்படுகொலை சாட்சியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பிரெஞ்சு மொழியில் பரப்புரைகளும் செய்யப்பட்டுள்ளன.அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பிரான்சு அமெரிக்க தூதரகத்தின் முன் ஈழத்தமிழின இனப்படுகொலை சாட்சிய நிழற்படங்கள் நீதி கேட்டு நிற்கின்றது.
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதில் முதன்மை பங்கு வகிக்கும் அமெரிக்க தூதரகத்தின் முன் இனப்படுகொலை நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.கடந்த நாட்களில் இந்த சாட்சியங்களை பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்ட தக்கது.உலக நாடுகளின் இரகத்தையும் ஆதரவையும் ஈழத்தமிழினம் பெறும்போதே விடுதலை சாத்தியம் அதனால் விடுதலைக்கான இவ்வாறான பணிகளும் ஓய்வற்று தொடரவேண்டியதும் கால நியதியாய் காலடியில் நிற்கிறது.